Friday, October 3, 2008

மரணத்தை நோக்கி செல்லும் வேர்கள்





ஆற்றின் பள்ளத்தாக்குகளின்
அழைக்கும் மரணங்களுக்கு
முன் நிகழும்
ஒட்டுமொத்தமானதொரு
இருள் நாளில்
நானின் புதிர்வெளிகள்
தன்னிலையை இழந்து
நகரங்களின் வன்முறை தரும்
முகசாகரங்களுக்கு
முன் தள்ளும் பொழுதுகள்

இருள்
சூழ்கின்றது – நம்
வாழ்வாதாரங்களில்….

ஒன்னிறிலிருந்து
வேறொன்றின் முன்
நிர்பந்தங்களின் மன இறுக்கத்தின்
காற்றின் மொழிகள்
தடமற்று தன்போக்கில்
பிடிப்பற்று மரணத்தை நோக்கி
செல்லும் வேர்கள்….

மளிகை சாமன்களின்
மத்தியில் நான் கலமாகி
போனதொரு பாதையில்
அழுகையுடன் முற்றுப்பெறாத
ஆதாரங்களின் முடிவுடன்
தொடர்கின்றது…
சிலுவை சுமக்கும்
வாழ்வின் பொய்கள்……!

அறைகளில் நிரம்பி போயிருந்த
காற்றின் புழுதியில் என்
ஒட்டகங்களின் முதுகில்
பொதிகளுடன்
கால் சுடும் மணற்
பரப்பில் யாருமற்ற
அனல் காற்று வீசும்
தனிமையில் புதைகின்றது
உன் நிறைவுகளுடன்….

உணர்வுகளின்
உயிரை கசக்கி
பிழியும் நிர்கதியற்ற
வாழ்வின்
ஆதாரங்கின் முன் மரிக்கும்
நளைய கனவுகளின் ஜீவன்கள்…..

என் அறைகளில்
தேங்கியிருக்கும் உன்
முகங்களின் சிரிப்பும்
சப்தங்கள் - நம்
எல்லா விதமான
தடங்களையும் கேலி
செய்து சரித்தபடி…

மல்லிகை மாத இதழ் அக்டோபர் 2005


1 comment:

மயூ மனோ (Mayoo Mano) said...

வலிக்கிறது......