Friday, October 3, 2008

நீர் தேக்கங்களின் நினைவுகள்….







என் பிறந்த வீடு
அங்கிருந்து
ஆகற்றப்பட்டு விட்டது!

புலம் பெயர்ந்த
மனிதர்களுக்கு
வாழ்வளிக்காத நிலத்தை
நீர் தேக்கம் என்ன
நிரப்பி
விடுமா என்ன!

நேற்று
ஓடி விளையாடிய
கால்களின் வாசனையை
இனி
நாம் எங்ஙனம்
தேடுவது…..


அம்மாவின்
நினைவிலிருந்து
தேயிலை மலை முகடுகள்
மட்டுமல்ல
அப்பாவோடு வாழ்ந்த
வீடும் நிலமும்
தண்ணீரில் மூழ்கி
விட்டது…!

காற்றின் மணம்வீசும் புல்வெளிகளில்
புல் அறுத்த
அறுவாளின் பச்சையாக
சிக்கியிருக்கும் புல்லின்
இரத்தத்தை போல்
மாடு அசை போடும்
ஆதி நினைவில் மூழ்கி
மின்சாரம்
வராத
எனது லய காம்ராவில்
ஜப்பானியனின் கனவுக்கு
மட்டும்
உறுதி
தெரியும் நமது
வாழ்வில் இனியும்
ஒரு வீட்டில் வாழ்ந்த
காலத்தின் மழை
துளி
வடிந்தோடும்
நினைவில் இறுதி பாடலில்
வரிகளில் பாட்டியின்
மரணம்….

மூதாதையர்களின் எலும்பும்
மச்சையும் மீதமாக
காதலிக்கும் இனி
சென்று வருவதற்கு
வீடும் சொந்த ஊரும்
இல்லாமல்
மலைகளில் புலம்பெயர்ந்து
மலைகளின் முன்பு ஒரு
மலை வாசியாக
வாழ்தல்
மட்டும்
தகிக்கின்றது கருணைகள்
ஏதுமற்ற கடவுளின்
உள்ளார்ந்த
பொய்களினால்….

2 comments:

ஃபஹீமாஜஹான் said...

"மூதாதையர்களின் எலும்பும்
மச்சையும் மீதமாக
காதலிக்கும் இனி
சென்று வருவதற்கு
வீடும் சொந்த ஊரும்
இல்லாமல்
மலைகளில் புலம்பெயர்ந்து
மலைகளின் முன்பு ஒரு
மலை வாசியாக
வாழ்தல்
மட்டும்
தகிக்கின்றது கருணைகள்
ஏதுமற்ற கடவுளின்
உள்ளார்ந்த
பொய்களினால்…."
அபகரிக்கப் பட்ட நிலத்தைப் பற்றிய வலி மிகுந்த சொற்கள்.
மலையக மக்களின் இந்தத் துயர நிலையை எவரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.
உங்கள் நிலத்தின் வாழ்வை எழுத்தில் கொண்டு வாருங்கள். காத்திருக்கிறோம்

மயூ மனோ (Mayoo Mano) said...

எங்களுக்கும் இது பொருந்தும்...

திரும்பிப் போவதானால் யாதுமற்று, யாதுமற்ற தீவுக்குத் தான் போய்த் தங்கவேண்டி வரும்...அதனால் தானே இந்தக் குளிரில் உறைந்து வெயிலில் கரைகிறோம்....

என் வலியையும் சேர்த்தே சொன்னது உங்கள் கவிதை...