Monday, April 25, 2011

அன்பின் மொழியை பேசும் ஆகாயப் பூக்கள்


பிரசன்ன விதானகே

திரைப்படம் குறித்த மனப்பதிவு

மாரி மகேந்திரன்


ரு திரைப்படம் வாழ்க்கை மீது ஏற்படுத்தும் தாக்கம் வெறும் மனோ நிலை சார்ந்ததாக மட்டும் முடிந்து போவதில்லை. அது உணர்வுகளின் மீதும், உள்ளே – வெளியே என்கிற வாழ்வின் இருவேறு பகுதிகளின் மீதும் தன் அழுத்தமான பதிவை வைத்து விட்டுத்தான் போகின்றது. எல்லா திரைப்படங்களும் மனித மூளையின் ஒரு பகுதியில் பிம்பங்களாகித்தான் போகின்றது. ஆனால் திரைப்படத்தின் பிம்பங்களும் தன் சுயமான வாழ்க்கைக்கும் தொடர்புகள் ஏதுமற்று போனதாக மனிதன் நம்புவதுதான் கேலிக்குரிய விடயம். ஏனென்றால் நல்ல திரைப்படமோ அல்லது மோசமான திரைப்படமோ மனிதனின் உணர்வுகளை பாதிக்கவே செய்கின்றது. அந்த தாக்கத்தின் நெறிஞ்சி முள் என்பது வண்ணாத்தி பூச்சிக்கள் அமர்ந்து செல்லும் தடத்தை போல சலனமற்ற ஓர் மருட்சியை ஏற்படுத்துவதுதான் திரைமொழியின் உள்ளீடான தொனி. 'ஆகாயப் பூக்கள்' திரைப்படமும் இப்படியான தாக்குதலை சுவடுகள் ஏதுமற்று செய்து விட்டதன் மன அவஸ்தையின் வலிகள் தான் இந்த கட்டுரைக்கான காரணங்களும்.



கொழும்பு நகரத்தில் வசிக்கும் தற்காலிகமான தற்சமயத்து வாழக்கையின் நிர்ப்பந்தமும் தனிமையும் நல்ல திரைப்படத்திற்கான வாய்ப்புகளுக்கு வழியேதும் இல்லாத போதும், ஒரு நல்ல திரைப்படம் பார்க்க கூட வாழ்வில் பாக்கியமற்ற துர்ப்பாக்கி;யம் ஒரு பக்கம் மனோ விரக்தியையும் சூனியத்தையும் - தந்தாலும் பிரசன்ன விதானகே போன்ற சில கலை ஆத்மாக்கள் இந்த நாட்டில் இருப்பதன் வாசனையின் சந்தமாக ஓர் சந்தோஷம் அவர்களின் படங்களாவது திரையரங்குகளில் வெளியாகி நம்பிக்கையை கொஞ்சம் தற்காத்து கொள்ள செய்வது மனதிற்கு சற்று நிம்மதி.

அதே நேரம் கொழும்பில் உள்ள ஒரு திரையரங்கில் ஆகாய பூக்கள் மொழி மாற்றம் செய்யப்பட்ட சில திரைப்படத்தை ஒரு மதிய நேர காட்சிக்காக நானும் எனது நண்பர்களும் சென்றிருந்த போது மூன்று பேருக்காக ஷோ போட முடியாது. ஆறு பேர் இருந்தால் ஷோ போடுவோம் என்பதாக கூறினார்கள். அதே நேரம் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படம் அன்றுதான் திரையரங்கிற்கு வந்திருந்தது. டிக்கட் கவுண்டரில் மாப்பிள்ளை படத்திற்கான வசூல் முந்திக்கொண்டு போய் கொண்டிருக்க 'ஆகாயப் பூக்களின்' திரையரங்குகளின் இருக்கைகள் காலியாகவே இருப்பதை பார்க்க மனதில் ஓர் வருத்தம் மெதுவாக ஏற்பட்டு தொடர்வதை உணர முடிந்தது. அத்தோடு வாசலில் டிக்கட் கவுண்டரில் இருப்பவர் திரையரங்கு முகாமையாளரிடம் சென்று பேசும்படி கூறிய பிறகு முகாமையாளர் நம்முடைய ஆர்வத்தையும் சங்கடத்தையும் கண்டு 6 டிக்கட் சரி விற்பனையானால்தான் திரைப்படத்தை காட்சிப்படுத்த முடியும் என்று கூறி விட்டு நம்மை யாரையாவது சென்று அழைத்து வரும்படி சொன்னார். நானும் திரையரங்கின் வாசலின் முன் வந்து சுற்றிச் சென்று பார்த்து விட்டு இயலாமையுடன் திரும்பினேன். நண்பரின் நண்பர் ஒருவர் படம் பார்க்க வந்திருந்தார். அவரும் ஆகாயப் பூக்கள் பார்க்கும் எண்ணத்தில் வந்திருந்தது சற்று சந்தோசம், இப்போது நால்வர், இன்னும் இருவருக்கான டிக்கட்டையும் சேர்த்து எடுத்து கொண்டு படத்தை பார்க்க சென்றோம்.

எனக்கு சாந்தால் அகர்மானின் JEANNE Dilian திரைப்படத்தை கேரள திரையரங்கில் பார்த்த ஞாபகம் தான் நினைவுக்கு வந்தது. அந்த படம் 3 மணி நேரத் திரைப்படம். கேரள திரைப்பட விழாவில் அவரின் முழுப்படத்தின் மீள் பார்வை என்ற பகுதிக்குள் அவரின் முழுமையான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் 10 பேர் தான். அந்த படம் தொடங்கி அரைவாசி நேரத்தில் 3 பேர் மட்டும் தான் மிஞ்சினார்கள். அதில் மூன்றாவதாக நான் மட்டும் வெதும்பி தனிமையில் இருந்தது ஞாபகத்தில் கோடு போல் வந்தது. சாந்தால் அகர்மானின் திரைப்படம் பெண்ணிய மொழியை திரையில் ஆய்வு செய்கின்றது. அவரின் மொழியே தனித்துவமானது. அதனால் தான் அவர் இது வரையும் சர்ச்சைக்குரிய திரைப்பட இயக்குனராக வலம் வருகின்றார். மாறாக ஆகாயப் பூக்களும் பெண்களின் தனிமையையும் வலியையும் ஆணின் மொழியில் சொன்னாலும் பிரசன்ன விதானகேயிடம் இயல்பாக இருக்கும் அன்பின் மூலமாக இத் திரைப்படத்தை நாம் மிக அருகில் சென்று பார்க்க சொல்கின்றது. அவரின் திரைப்படங்கள் அனைத்தும் ஒரு ஞானியின் மனோ பாவத்துடன் அனுகப்படுவதனால்தான் இப்படங்கள் உணர்வுகளில் கலந்து மரணத்தின் வேதனையையும் குற்ற உணர்வுகளில் முக்ததை நம் வாழ்க்கையில் அன்றாட நிகழ் பதிவில் கண்ணாடியாக முன் நிறுத்தி நம்மையே நமக்கு சுட்டிக்காட்டி இனி வரும் திசைக்கான பயணத்தை தீர்மானிக்கின்றது. இதனால் தான் இவரின் திரைப்படத்தை பார்க்க இந்த சராசரி பார்வையாளர்களுக்கு பெலன் இல்லாமல் போய்விடுகின்றதோ என்று கூட நான் சிந்திக்கின்றேன்.

மற்றும் இத் திரைப்படம் பெண் பற்றிய சமூக பார்வைகளை உடைத்தெறிவது ஏனோ ஆண்மையை மனங்களுக்கு ஒரு நெருடலையும் தனிமையும் கருத்துகள் நிர்மூலமாகி போவதற்கான சூழலையும் ஏற்படுத்தலாம். பொதுவாகவே கதாபாத்திரங்கள் உணர்வுகளின் மீது பிரசன்ன பயணிக்கும் பயணம் கடினமானதாக தோன்றுகின்றது. ஏனென்றால் சமூகத்தின் தீர்மானம் நல்லதும், கெட்டதும், நல்லவன், கெட்டவன் என்ற பொதுப்படையான முன் தீர்மானிப்பதனால் ஏற்படும் ஆழமான வன்முறையை இவர் தன் திரைப்படத்திலிருந்து மிகவும் மெதுவாகவும் இலகுவாகவும் கடந்து போய் விடுகின்றார். இது இவர் மனதிலும் வாழ்விலும் கொண்டிருக்கும் அதி அற்புதமான அன்பு மொழிதான் இப்படி கடக்க செய்கின்றது. வாழ்க்கை மீதும் மனிதர்கள் மீதும் பிரசன்ன என்கிற அற்புதமான மனிதன் தன் பதிவை திரையின் கவிதைகளாக எல்லோரின் மொழியாக அன்பை மட்டும் விட்டு விட்டு செல்வதனால்தான் அவரின் திரைப்படங்கள் மொழி, உணர்வு, மற்றும் சமூகம் தந்திருக்கும் முக மூடிகளை கலைந்து சாகா வரம் பெற்ற படைப்பாக நம் முன் நிழலாடிச் செல்கின்றது. மற்ற திரைப்படங்கள் உடலோடு முடிகின்றது. இவரின் திரைப்படங்கள் ஆத்மாவின் கூடுகளை பிரித்து எப்போதும் தன் சுயத்தை தேடி பயணிக்கின்றது. கலையும், சினிமாவும் வாழ்க்கையும் மனிதனையும் குறித்து பேசா விட்டால் அது வெறும் சக்கை தான். அதனால் அந்த சினிமாவுக்கோ சினிமா கலைஞனுக்கோ எந்தவொரு பயனும் இல்லாதது வருத்தமே. நிறைய தமிழ் சினிமாக்களின் நிலை இது தானே.

                    








நானொரு பெண்ணிய இயக்குநரா என்று
மற்றவர்கள் என்னிடம் கேட்கும்பொழுது:
'நான் ஒரு பெண். நான் சினிமாக்களும் எடுக்கிறேன்;'
-சாந்தால் அகர்மான்-

எனறு சாந்தால் அகர்மானின் மேற்கோள் கூட இதைதானே உறுதிப்படுத்துகின்றது. மனிதனை ஆழமாக நேசிக்கும் போதும் வேறுபாடுகள் கடந்து போகின்றது என்பதற்கு இது போன்ற இயக்குனர்களின் படைப்பும் வாழ்க்கையும் தான் நமக்கு இருக்கின்ற மிக முக்கியமான சாட்சிகள்.

'உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசிர்வதியுங்கள். உங்களை பகைக்கிறவர்களுக்காக நன்றி செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காக, உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். என்ற வேதாகம வசனம் கூட இதைதான் நினைவுபடுத்துகின்றது. மனிதன் மீது காட்டும் அன்பின் வெளிப்பாடாக இத் திரைப்படம் பிரசன்னவின் ஆழமான அன்பின் மொழியை திரையில் பேசிவிட்டு செல்கின்றது. அதனால்தான் அது நமக்கு அண்மையில் வந்து கண்ணீரையும் கனத்த கருத்தையும் தருகின்றது.

மாலினி பொன்சேகாவின் திரை உலக பிரவேசத்தின் உண்மைத் தன்மையையும், புனைவையும் இணைத்து நமக்குள் திரையுலக வாழ்க்கையின் 'பெண்' என்ற கதாபாத்திரம் வகிக்கும் பங்கையும் திரைப்பட உலகம் பெண்ணின் உடலை சுவைக்கும் மாயங்களின் பேய் கூடம் என்பதற்கான ஆதாரங்களுடன், திரைப்பட உலகம் மட்டுமல்ல சமூகம் பெண்ணுக்கான தனித்துவத்தை எப்போதும் மறுத்து வருவதை இப்படம் உள்ளீடாக சொன்னாலும் படத்தில் வரும் இரவு விடுதியின் பெண்களின் வாழ்க்கையை பிரசன்ன மனித நேயத்துடன் அவர் கூறும் ஆத்மாவின் வலியும், பேச முடியாத கனங்களும் வாழ்க்கையில் நாம் வைத்திருக்கும் பொதுவான பார்வை என்பது, தெருக்களில், வங்கியில், பஸ் பயணத்தில், ரயிலில் , சாலைகளில் தரித்து நிற்கும் வாகனங்களின் ஜன்னல் கண்ணாடி வழியாக நாம் பார்க்கும் 'பெண்' என்ற வஸ்துவை குறித்த ஆண்மையின் பார்வை என்பது 'வேசித்தனம் பண்ணுபவள்' தானே என்ற உள்ளிருந்து வெளிப்படும் சமூக மனத்தின் வெளிப்பாட்டையும் முன் தீர்மானிப்பதை இப்படம் அசைப்பதுதான் சிறப்பு. நிம்மி ஹரஸ்கம என்ற பெண்ணின் நேர்த்தியான நடிப்பை எப்போதும் பாராட்டித்தான் ஆக வேண்டும். இவரின் யுரபரளவ ளரn திரைப்படம் இன்னும் மறக்க முடியாது. இவர் மனோ நிலையையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதம் நம் இருதயத்தையும் அதன் கருத்தாக்கங்களையும் அசைக்கின்றது. மிக நீண்ட இடைவெளிகளுக்கு பின்பு ஒரு சிறந்த நடிகையை சிங்கள திரையும் பெற்றிருக்கின்றது. ஆனால் சிறந்த நடிகைகளுக்கு திரைப்படங்களில் தன் ஆளுமையை செலுத்த முடியாமல் போவதுதான் மன வருத்தமானதொன்று. நல்ல சினிமா அன்பை போல் கொஞ்சமாகத்தான் இருக்கின்றது. அது ஆகாயம் போல பூக்கும் போது நட்;சத்திரங்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல நம் வாழ்க்கையிலும் வண்ண கனவுகளையும் கைகூட செய்யும் எனது உறுதி.

ஆகாயத்துப் பூக்கள் பெற்ற சர்வதேச விருதுகள்..

வெள்ளி மயில் விருது – மாலினி பொன்சேகா
2008 சர்வதேச இந்திய திரைப்பட விழா

சிறந்த நடிகை – மாலினி பொன்சேகா
2009 சர்வதேச லெவாந்தே திரைப்பட விழா - இத்தாலி

ஆசியாவின் சிறந்த திரைப்படத்திற்கான நெட்பெக் விருது
2009 க்ரணாடா சர்வதேச திரைப்பட விழா - ஸ்பெயின்

ஜூரியின் கௌரவிப்பு
2009 பிரெஞ்சு நாட்டு வெசூல் சர்வதேச திரைப்பட விழா
..................................................................................................................................................................