பிரித்தானிய வன்முறை
கரங்களில் அடிப்பட்டு
தாத்தா செத்தது….
நான்அழுகையோட
அவதரித்தது….
பாட்டியின்அழுகை
ஓலம் அரங்கேறியது!
அப்பா அம்மா
வெளியேறிப்போன
பின் அக்காவும்
மச்சானும்கூடிக் கிடந்தது…
தங்கச்சி வயசுக்கு வந்தது!
தம்பிப் பயல்அடிக்கடி
நிறுநீர்கழித்தது!
குமுறல்களின் விம்மல்
இருண்ட நிலவில் சோகத்துடன்
முடிந்தகதை….
ஒரு நாள்
சரசா அக்கா துாக்கு
போட்டுக்கொண்டது….!
ஈர சுவரில்
அரச மரக்
கன்று ஒன்று
துளிர் விட்டது!
ஊர்ந்து செல்லும்
சீனி எரும்புகளின்
சினேகத்தை கற்றது….
இப்படி நிகழ்வுகள்
ஒவ்வொன்றும்
இந்த எட்டடி
பிரித்தானிய காலத்து
லய காம்ராவில்தான் முடிகின்றது!
நுாற்றாண்டு
கடந்தும் வானம் தெரியும்
கூரையும் மழை
கசியும் பக்க சுவர்களும்…
இன்னும் இடிந்து
விழுந்துவிடாமலே
கிடக்கும் வாழ்க்கையும்
இப்படியாக
அவலங்கள்
எல்லாம்
வாழ்க்கையாகி
நகர்கின்றது….
நன்றி: ஞானம் - ஜுன் 2005
No comments:
Post a Comment